எனது தலைமையில் செயல்படும் கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் மதுரை மாவட்ட அமைப்பாளர் ஜி.பி.ராஜாவின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதத்தின் முதல்வாரத்தில் மதுரை வந்தார் கனிமொழி. முன்பெல்லாம், கனிமொழி மதுரை வருவதும் போவதும் தெரியாது. விரல்விட்டு எண்ணும் சிலரே விமான நிலையம் சென்று வரவேற்பார்கள். ஆனால் இந்தமுறை வழக்கத்திற்கு மாறாக, அவரை வரவேற்க அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மூர்த்தி, மன்னன், மிசா பாண்டியன், கவுஸ்பாட்சா, எஸ்ஸார் கோபி என பெருங்கூட்டமே விமான நிலையத்தில் கூடியிருந்தது. அத்தோடு ஆட்டம் பாட்டம் என பெரும் வரவேற்பு கனிமொழிக்கு அளிக்கப்பட்டது.
மத்திய அரசிலிருந்து விலகிய சூழ்நிலையில் திமுக தலைமையுடன் முறுக்கிக் கொண்டிருக்கும் அழகிரியுடனான கனிமொழி சந்திப்பு திமுகவில் பல ஊகங்களைக் கிளப்பி உள்ளது.
‘அழகிரியை சமாதானப்படுத்தத்தான் கனிமொழி வந்தார். அதுவும் தலைவரால் அனுப்பப்பட்டார் என்றும் கட்சியினர் சொல்கிறார்கள். கனிமொழியின் வார்த்தைகளைக் கேட்ட அழகிரி, ‘எனக்கும் அது தெரியும். தென் மண்டல அமைப்புச் செயலர் என்ற முறையில், நானும் சில நடவடிக்கைகளை எடுத்தால் கட்சியின் நலன் பாதிக்கும். கட்சிக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமைக்கு விளக்கம் கேட்டு இளங்கோவன் அனுப்பிய நோட்டீசுக்கு சம்பந்தப்பட்டவர்களும் விளக்கம் எழுதி அனுப்பி விட்டனர். இத்துடன் அப்பிரச்னையை விட்டு விட வேண்டும்’ என ஸ்டிரிக்
டாகச் சொல்லியிருக்கிறார். உடனே கனிமொழியும் தந்தையிடம் இது குறித்துப் பேசி ஓ.கே. வாங்கியிருக்கிறார். அழகிரி-ஸ்டாலின் இணக்கத்தை உறுதி செய்யும் வகையில் மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் வரும் ஸ்டாலின், அழகிரியை சந்திக்கவேண்டும் என்றும் முடிவானது. அன்று மாலையில் சென்னை திரும்பிய கனிமொழி, மதுரை சம்பவங்களையும் அண்ணனிடம் பேசியதையும் தந்தையிடம் விளக்கியுள்ளார். ஆனால் கடந்த 12ம் தேதி, மதுரைக்கு ஸ்டாலின் வந்தார். அவரை விமானநிலையத்தில் வரவேற்க அழகிரி ஆதரவாளர்கள் செல்லவில்லை. மதுரையில், பி.டி.ஆர்., பழனிவேல் ராஜனின் மூத்த சகோதரர், கமல தியாகராஜன் மற்றும் முன்னாள் துணைவேந்தர் ராதா தியாகராஜனின் குடும்பத்தினரை சந்தித்து ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். அன்று இரவு மதுரையில் தங்கி அழகிரியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் ஏற்கனவே பதிவு செய்திருந்த அறையை ரத்து செய்துவிட்டு, ராமநாதபுரம் சென்று தங்கினார். இரண்டு நாள் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருப்பத்தூர் என, சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், மதுரையில் அழகிரியை சந்திக்காமல் சென்னை திரும்பியது தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது.
இணக்கமான முடிவுக்கு வராமல் நகர்ந்து கொண்டிருக்கும் குடும்ப விவகாரம் கருணாநிதியை மிகவும் வேதனையில் தள்ளியிருக்கிறது என்கிறார்கள் தி.மு.க.வின் உயர்மட்டத் தலைவர்கள். ‘மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலிருந்து விலகியிருக்கும் சூழ்நிலையில், கட்சியின் சொற் பொழிவாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது தி.மு.க. கட்சியைப் பொறுத்தவரை இந்தக் கூட்டம் முக்கியமானது. காரணம், காங்கிரசுடனான உறவைத் துண்டித்தது குறித்து மக்கள் மத்தியில் விளக்க வேண்டிய பணி இந்த சொற் பொழிவாளர் அணிக்கு உரியது. அந்தக் கூட்டத்தை திடீரென்று ரத்து செய்தார் கருணாநிதி. தொண்டை வலியால் அவதிப்படுவதால் கூட்டம் ரத்து எனச் சொன்னாலும் கூட உண்மையில் அவருக்கு மனவலி தான்அதிகம்’ என்கிறார்கள்.
இதன் பிறகு நடைபெற்ற தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுக்குழுகூட்டத்தில் பேசிய கருணாநிதி, ‘உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். அது ஒற்றுமையாக இருங்கள். ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டுங்கள். நம்மவர்களையே எதிரிகள் போல் கருதாதீர்கள். ஏனென்றால் ‘பிரிவினை’ பெருவினையாக மாறி தி.மு.க.வையே அழித்து விடும்’ என அருகில் ஸ்டாலினை வைத்துக் கொண்டு பேசினார்.
அதுமட்டுமில்லாமல் கனிமொழியை தனது பிள்ளைகள் பந்தாடுவதை கருணாநிதியால் தாங்கமுடியவில்லை என்கிறார்கள். அதாவது ‘அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் தான் பிரச்சினை. கனிமொழியால் ஸ்டாலினுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. அப்படியிருக்கையில் கனிமொழி கூட்டங்களுக்கும் ஏன் ஸ்டாலின் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற வருத்தத்தில் இருக்கிறார் தலைவர். கனிமொழியும் அரசியலில் தொடர்ந்து முன்னேற எதையும் எதிர்கொள்ளத் தயாராகிவிட்டார்.
சிறை வாசம் அவரை மேலும் நேர்த்தியாக்கியது...’ என்கிறார்கள்.
இதற்கிடையே ‘கனிமொழியின் இலக்கு கட்சியில் முக்கிய இடம்’ என்று அவரது ஆதரவாளர்கள் சொல் கிறார்கள். ஸ்டாலின் இருக்கையில் மாநில அரசியலில் சாதிப்பது என்பது சாத்தியமானது அல்ல என்பது கனிமொழிக்குத் தெரியும். அவரது ராஜ்யசபா எம்.பி. பதவி காலமும் விரைவில் முடிவடையவுள்ளது. மீண்டும் அவர் எம்.பி.ஆகவேண்டும். தி.மு.க.விற்கு இப்போதிருக்கும் எம்.எல்.ஏ. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு கூட வாய்ப்பில்லை. தேமுதிக கைகொடுத்தால் கிடைக்கலாம் என்பது அரசியல் எதிர்பார்ப்பு. ஆனால் அதுவும் உறுதி இல்லை. எனவே அடுத்தாண்டு வரும் மக்களவைத் தேர்தலில் களமிறங்க வேண்டியிருக்கும் என்று கனிமொழி எதிர்பார்க்கிறார்.
அடுத்தாண்டு வரவுள்ள மக்களவைத் தேர்தலில் கனிமொழி குறிவைத்துள்ள தொகுதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி. அதற்குக் காரணம் இந்தத் தொகுதியில் நாடார் வாக்கு வங்கி பலம். அண்மையில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்லும் போது கட்சியினரை விட திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த நாடார் சமுதாய மக்கள் அதிக அளவில் அவருக்கு வரவேற்பு அளித்ததை உளவுத்துறையும் பதிவு செய்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் கனிமொழியின் பிறந்தநாளின் போது தமிழகமெங்கும் நாடார் சமுதாயத்தினர் வாழ்த்துப் போஸ்டர் ஒட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் அவர் போட்டியிடும் நேரத்தில் அழகிரியுடனான நட்பு மிகுந்த பலனைத் தரும் என அவரது ஆதரவாளர்கள் நினைத்து காய் நகர்த்துகிறார்கள்.
மே, 2013.